Wednesday, July 8, 2009

பவளப்பாறையில் சஞ்சரிக்கும் கடற் குதிரை!


பவளப்பாறையில் சஞ்சரிக்கும் கடற் குதிரை!
இப்பூவுலகில் விசித்திரமான உயிரினங்கள் சில சுதந்திரமாக உலாவி வருகின்றன என்பதை நாமறிவோம். ஆனால் இவற்றை ஆசை தீரக் கண்டுகளிப்பதற்கு மிருக காட்சிச் சாலை, சரணாலயங்கள் போன்றவற்றை நாடிச் செல்லவேண்டியும் வரலாம். அங்கு மிருகத்தையோ, பறவையையோ ஆசைதீர கண்டு ரசிக்கலாம்.

காலநிலை ஒவ்வாத நிலைமை ஏற்படும் பட்சத்தில் இந்தியாவின் இமாலய பிரதேசத்திலிருந்து சில பறவைகள் தென் இந்திய மாநிலங்களுங்கு ‘வலசை’ மேற்கொள்கின்றன. வலசை என்பது பறவைகள் இடம்பெயர்தலைக் குறிக்கும். இலங்கையின் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் அனேக பறவைகள் வெளிநாட்டிலிருந்து வலசை வருகின்றன என்று பறவைகள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார். அன்னிய தேசத்து பறவைகள் வாயிலாக பறவைக் காய்ச்சல் போன்ற தொற்று நோய் பரவக்கூடிய சாத்தியம் ஏற்படலாம் என்பதினால் நம் நாட்டு சுகாதார திணைக்களம் மிகுந்த அவதானத்துடன் செயலாற்றியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது வீட்டுத் தோட்டத்திலுள்ள கனிகளை இரவு வேளையில் உண்பதற்காக பாலூட்டி (மமல்) இனத்தைச் சேர்ந்த வெளவால் பறந்து வருகின்றது. இதன் நிரந்தர வதிவிடம் பாழடைந்த வீடு, மகாவிருட்ஷம் என்பனவாகும். இவை தலைகீழாக தொங்கிய வண்ணமே துயில் கொள்கின்றன என்பதைக் காண்கின்றோம்.

அதேவேளை பூமியில் மூன்றில் இரண்டு பங்கு நீரினால் சூழப்பட்டுள்ளது என்பது புவியியலாளரது கூற்றாகும். இங்கும் சில அதிசயிக்கத்தக்க நீர்வாழ் உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன என்பது யதார்த்தமாகும். அவற்றில் கடற்பசு, நீர் நாய், கடல் யானை, கடற் பன்றி, கொலைகார திமிங்கிலம், டொல்பின், கடற் குதிரை என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

கடற் குதிரையின் தோற்றம், சஞ்சாரம், கறுப்பு சந்தையில் இவ்வரிய குதிரைகள் பரிமாற்றம் என்பவற்றை இங்கு ஆராய்வது உசிதமாகும்.

அதன் தோற்றத்தை உற்றுநோக்குவோமானால் முகத்தில் குழாய் வடிவிலான மூக்கோடு, நீந்திச் செல்வதற்கு ஏற்ப சிறிய துடுப்புடன் காணப்படுகின்றன. இவை இராமேஸ்வரக் கடலிலும், மன்னார் வளைகுடாவிலும் பரிணமித்துள்ள பவளப் பாறைகளில் சஞ்சரிக்கின்றன. சர்ச்சைக்குரிய சேது சமுத்திரத் திட்டம் தீர்மானிக்கப்பட்ட பிரகாரம் நிறைவேறும் பட்சத்தில் கடற் குதிரைகளின் வதிவிடமாகத் திகழும் பவளப் பாறைக்கு நிச்சயம் பங்கம் ஏற்படத்தான் செய்யும். இதனால் அவை முற்றாக அழியும் நிலையும் உண்டாகலாம்.

கடற்குதிரையில் சுமார் முப்பத்தைந்து வகைகள் உள்ளன. இவற்றின் இன விருத்தி விஞ்ஞானிகளுக்கே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது எனலாம். இதற்கு ரோமானியரின் கடல் தேவதையின் பெயரான ‘ஹிப்போ கெமெக்ஸ்’ என்ற நாமத்தினாலும் அழைப்பதுண்டு.

பொதுவாக கடற்குதிரை தனது சிறிய துடுப்புக்களைப் பயன்படுத்தி மெதுவாக நீந்திச் செல்லும் இயல்புடையது. சிலவேளைகளில் இது நிமிர்ந்து நின்றபடியே நீந்தும் வல்லமை பொருந்தியது அதிசயிக்கத்தக்கதொரு விடயமாகும். கடல்பாசிக்கு மத்தியிலும் பவளப் பாறைக்கு இடையிலும் தென்படுகின்ற கடற்குதிரை ஐந்து தொடக்கம் முப்பத்தாறு சென்ரிமீற்றர் வரை பருமனுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

கடற்குதிரையானது உலகெங்கும் அழிந்துவரும் உயிரினங்களின் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இதனை வர்த்தக நோக்கோடு பெரும் எண்ணிக்கையில் பிடித்து ஏற்றுமதி செய்வதில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சர்வதேசமெங்கும் கடற் குதிரையை கொள்வனவு செய்ய பலர் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக இவ்வுயிரினத்தைப் பிடித்து காயவைத்து கடத்தல் மூலம் அந்நிய நாட்டிற்கு கப்பலில் எடுத்துச் செல்லப்படுகின்றது. சாதாரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படும் கப்பல்களையே இதற்கும் பயன்படுத்துகின்றனர்.

சர்வதேச சந்தையில் சுமார் பதின்மூன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டரை மெட்ரிக் தொன் உலரவைக்கப்பட்ட கடற்குதிரைகள் சென்னையிலிருந்து சிங்கப்பூர் துறைமுகத்திற்கு சென்றுகொண்டிருந்த ‘மைசூர் பியர்ஸ்’ என்ற பெயருடைய கப்பலில் கடத்தப்பட்டமை இரண்டாயிரத்து ஆறு ஜுலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டமை தக்க சான்றாகக் கொள்ளலாம். சென்னை மாநகர துணை பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த அனாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் இது சுங்கத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

அருகிவரும் கடல் உயிரினங்கள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் பற்றிய பட்டியலிலும் கடற் குதிரைகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மன்னார் வளைகுடாவில் கடல் குதிரையின் சஞ்சாரமானது கடல் வாழ் உயிரின ஆணையாளரினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்குதிரையிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒளடதங்கள் பாலுணர்வை அதிகரிக்கும் என்பதினால் சீனா, சிங்கப்பூர், மலேசியா, யப்பான் போன்ற நாடுகளில் கடற் குதிரைக்கு ஏகப்பட்ட கிராக்கி உருவாகியது. கடல் மட்டத்திற்கு வந்து காதல் நடனமாடும் கடற் குதிரைகளுக்கு இது மிகவும் கசப்பான செய்தியாகும் என்பது யதார்த்தமாகும். தென் கிழக்கு ஆசிய சந்தையை குறிவைத்து கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சென்னைத் துறைமுகம் உகந்த இடமாகத் தென்படுகின்றது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா கொள்ளையடிக்கப்படுகின்றது என்பது கண்கூடு. அண்மையில் தூத்துக்குடியிலுள்ள மீனவர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கடற் குதிரையில் புதுவகையான ஐந்து இனங்கள் வாழ்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளன. உலர்ந்த கடற்குதிரையிலிருந்து மருந்து தயாரிப்பதில் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தூத்துக்குடி கடல் பரப்பில் கடல் குதிரைகளுடன் கடல் வாழ் வெள்ளியினங்களும், இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் இருமுறை கடற் பசுக்களும் பிடிபட்டன.

பீஜிங் மாநகர மக்கள் கடற் குதிரையினால் தயாரிக்கப்பட்ட ஒளடதங்கள் மட்டுமல்லாது வேறுபல பிரயோஜனமான விடயங்களுக்கும் கூட கடற் குதிரையை பயன்படுத்தி வருகின்றனர்.

பவளப் பாறையில் சஞ்சரிக்கின்ற கடற் குதிரைக்கு இவ்வளவு மவுசு உள்ளதென்பதை அறிய வியப்படைய வேண்டியுள்ளது.